சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் முதல்கட்டமாக, பரங்கிமலை - சென்ட்ரல், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையே திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணிகள் முடிந்த வழித்தடங்களில், ஒவ்வொரு கட்டமாக, போக்குவரத்து துவங்கப்பட்டது.
இதில், இறுதியாக நேற்று முன்தினம், டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் இயக்கத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, முதல்கட்ட திட்டம் கிட்டத்தட்ட முழுமை பெற்றுள்ளது.
இந்த திட்டத்தில், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, முதல்கட்ட விரிவாக்க பணி மட்டும் நடந்து வருகிறது.
பிரமாண்ட கட்டுமானத்தை கொண்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தின் முதல்கட்ட திட்டம் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ள மகிழ்ச்சியில், அனைத்து வழித்தடத்திலும், நேற்று முன்தினம் முதல், இன்று இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை முதல், கட்டணமின்றி ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணித்து மகிழ்ந்தனர்.
அனைத்து மெட்ரோ ரயில்களிலும், நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன், குடும்பமாக மெட்ரோ ரயிலில் பயணித்து உற்சாகமடைந்தனர். ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி, நிலையங்களின் பிரமாண்ட கட்டுமானங்களை வியப்புடன் பார்த்தனர்.
ரயில் இயக்கம், நிலையத்தின் உள்ள தொழில்நுட்ப வசதிகள் குறித்து, சிறுவர்கள், ஊழியர்களிடம் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதியினரையும் மெர்ரோ ரயில் பயண பாதுகாப்பு, அறிவிப்புகள், ஊழியர்களின் கண்காணிப்பு மற்றும் உதவி ஆகியவை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று காலை முதல் மதியம் வரை, மெட்ரோ ரயில் சேவை பாதிப்புக்குள்ளானது. விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப் பேட்டை வரை ஒரு வழித்தடத்தில் மட்டும், ரயில் இயக்கப்பட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
முன்னதாக, சின்னமலை - டி.எம்.எஸ்., இடையே, மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட போது, ஒரு வாரம் வரை, இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், தற்போது ஒரு சில நாட்களுக்கு, மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ள, நிர்வாகம் அனுமதிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கட்டணத்தை மேலும் குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது.
இந்நிலையில், நாளை இரவு வரை பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தற்போது புதிய அறிவிப்பு வந்துள்ளது. இது பொதுமக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.