சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய புயல் சின்னம், அதாவது காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ. 29) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் 2ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெற கூடும்.
இந்த நிலையில், இது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் மழை நீடிக்கும். குறிப்பாக டிசம்பர் 1ஆம் தேதி அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், வடதமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரத்தில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி!