சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் (அக். 21) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்றே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 19ஆம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அன்றைய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகி உள்ள இந்த புயலுக்கு 'தேஜ்' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த புயல் நேற்று (அக். 22) தீவிர புயலாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மேலும் இந்த புயலானது அதிதீவிர புயலாக மாறி, வருகிற 25ஆம் தேதி அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தென்மேற்கு அரபிக் கடலில், நிலை கொண்டுள்ள இந்த அதிதீவிர 'தேஜ்' புயல், இன்று மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் நாளை மறுநாள் (அக். 25) அதிகாலை ஓமன் மற்றும் ஏமனுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி விழா: பெரியநாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்!