சட்டப்படிப்பில் சேருவதற்காக தேசிய சட்டப்பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 5ஆம் தேதி வெளியானது. இத்தேர்வில் மதிப்பெண்களில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, ஓசூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் எனது மகள் சத்தியஸ்ரீ 67.5 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக குறிப்பிட்டிருந்த நிலையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், இணையதளத்தில் மதிப்பெண் சான்றைப் பதிவிறக்கம் செய்தபோது 22.75 மதிப்பெண் பெற்றிருப்பதாகப் பதிவாகியிருந்தது.
தனது மகளின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சட்டக் கல்வி பயிலும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதால், தேர்வு முடிவின்போது அவர் பெற்ற 67.5 மதிப்பெண்களையே வழங்க வேண்டும்.
தென்மாநிலங்களில் உள்ள தேசிய சட்டப்பல்கலைக் கழகங்களில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரவணன், மனுவுக்கு நவம்பர் 5ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்கு உத்தரவிட்டார்.