சென்னை அயனாவரம் பகுதியில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தனது பாட்டியுடன் வசித்துவந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி இச்சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமி பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்ததைக் கண்ட கார்பென்டர் வெங்கடேசன் என்பவர், சிறுமியிடம் நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி, திருத்தணியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வீட்டில் அடைத்துவைத்து, கடந்த மூன்று மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து துன்புறத்தியுள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னர் வெங்கடேசன் பணி நிமித்தமாக ஆந்திராவிற்குச் சென்றதால், வீட்டில் அடைத்து வைத்திருந்த சிறுமியை அவரது வீட்டுக்குச் செல்லும்படி வெங்கடேசனின் அனுப்பிவைத்துள்ளார். பின்னர் சிறுமி வெளியே சுற்றியதைக் கண்ட மற்றொரு நபர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், சிறுமி மீண்டும் அங்கிருந்து தப்பியோடி திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி சுற்றித் திரிந்துள்ளார்.
இதனைக் கண்ட ரயில்வே காவல் துறையினர் சிறுமியிடம் விசாரித்தபோது, அயனாவரம் பகுதியில் வசித்துவருவதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து அயனாவரம் காவல் துறையினரை தொடர்புகொண்டு சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னர் பாட்டியிடம் சிறுமி அனுப்பிவைக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:'பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்' - இயக்குநர் கௌதமன்