சென்னை:சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில், 22வது மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அதில், "வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 21 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இன்று 22வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 9 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர், முதல் தவணை 90.94% பேரும், இரண்டாம் தவணை 70.46% பேர் செலுத்தி உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி 5 லட்சத்து 52 ஆயிரம் பேருக்குப் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி என்கிற நிலையை, 12 ஆயிரம் ஊராட்சிகளில் 2,792 ஊராட்சிகளும், 24 நகராட்சிகளும் எட்டியுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெற உள்ளதால், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது.
இழப்பீடு
கரோனாவினால் உயிரிழந்த மருத்துவர்களுக்கான இழப்பீடு தொகை 25 லட்சம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் வழங்கிய சுகாதார பணியாளர்கள் குடும்பத்தினருக்கு மாநில அரசின் நிதியுதவி வழங்க வேண்டாம் என மத்திய அரசு வழிமுறைகள் வகுத்துள்ளது, அதன்படி, இதுவரையில் விண்ணப்பித்த நபர்களில் 15 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி, தற்போது விரைவாகக் குறைந்து வரும் சூழ்நிலையில், மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளதாகவே எண்ணுகிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசின் கஜானாவை காலி செய்ததுதான் அதிமுகவின் சாதனை - கனிமொழி பேச்சு