சென்னை அம்பத்தூரை அடுத்த மாதனகுப்பத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியில் தைய்யல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒருவாரமாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த குமார், நேற்றிரவு (ஜூலை 22) அம்பத்தூர் உள்ள சக்தி மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண ஊசி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஊசி எடுத்துக்கொண்ட சிறிது நேரத்திலேயே குமாருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவலறிந்த அம்பத்தூர் காவல்துறையினர், மருத்துவமனைக்கு சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மெடிக்கல் ஷாப் உரிமையாளர் பாஸ்கரை, காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பாஸ்கர் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு மெடிக்கல் ஷாப் நடத்தி வருவதும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்தது.