மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு கடந்த 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெற்று முடிவடைந்தது.
அதில் பல் மருத்துவப்படிப்பில் 6 இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கு 21ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க 70 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 64 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 58 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 2 மாணவர்கள் பிடிஎஸ் படிப்பிலும் இடங்களை தேர்வு செய்தனர். 4 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் 10 பேரும், பி.டி.எஸ். படிப்பில் ஒரு மாணவரும், விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் ஏழு மாணவர்களும், பி.டி.எஸ்.படிப்பில் ஒரு மாணவரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 41 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பினை தேர்வு செய்துள்ளனர்.
பொதுப்பிரிவுக் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் 26 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,747 இடங்களும், 14 தனியார் மருத்துவக் கல்லூரியில் 1,061 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 151 இடங்களும், 18 தனியார் மருத்துவக் கல்லூரியில் 985 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதனிடையே, மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள அட்டவணையில், ”எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ராஜாமுத்தையா மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இந்த கலந்தாய்வு காலை 9 மணி, 11 மணி, மதியம் 2 மணி என 3 பிரிவாக நடத்தப்படும். நவம்பர் 23ஆம் தேதி தரவரிசைப் பட்டியில் ஒன்று முதல் 361 வரை பெற்றவர்களும், 24ஆம் தேதி 362 முதல் 751 வரை இடம் பெற்ற மாணவர்களும், 25ஆம் தேதி 752 முதல் 1203 வரை இடம் பெற்ற மாணவர்களும், 26ஆம் தேதி 1204 முதல் 1701 வரை பெற்றவர்களும், 27ஆம் தேதி 1702 முதல் 2150 வரை இடம் பெற்ற மாணவர்களும், 28ஆம் தேதி 2151 முதல் 2622 வரை பெற்றவர்கள் கட்ஆப் மதிப்பெண் 551 வரையில் அழைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 29ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி 2,623 முதல் 3,151 வரையில் பெற்றவர்களும், டிசம்பர் 1ஆம் தேதி 3,152 முதல் 3,707 வரையில் பெற்றவர்களும், டிசம்பர் 2ஆம் தேதி 3,708 முதல் 4,301 வரையில் பெற்றவர்களும், 3ஆம் தேதி 4,302 முதல் 4,890 வரையில் பெற்ற மாணவர்களும், 4ஆம் தேதி 4,891 முதல் 5,441 வரையில் கட்ஆப் மதிப்பெண்கள் 495 வரையில் பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
மாணவர்கள் தங்களுக்கான அழைப்பு கடிதத்தை www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தனியாக யாருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு முதல் முறையாக சிபிஎஸ்இ, எஸ்.எஸ்.சி.இ.பாடத்திட்டத்தில் படித்த 7,366 மாணவர்களும், ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் படித்த 285 மாணவர்களும், வேறு மாநில பாடத்திட்டத்தில் படித்த 171 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றுள்ளனர் என்ற சான்றிதழை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இருந்து பெற்று வர வேண்டும் என மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கு குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கல்வி தொலைக்காட்சி பார்த்த 2.07 கோடி பேர்