சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மூன்றாயிரத்து 32 இடங்கள், இரண்டு பல்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 165 இடங்கள், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 147 இடங்கள், 18 தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 65 இடங்கள் ஆகியவை இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக காலியாக உள்ளன.
இந்த இடங்களில் மாநில ஒதுக்கீட்டில் சேர்வதற்கு அனுப்பப்பட்ட 24 ஆயிரத்து 712 விண்ணப்பங்களில் 23 ஆயிரத்து 707 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் மாணவர்கள் எட்டாயிரத்து 765 பேர். மாணவிகள் 14 ஆயிரத்து 942 பேர் ஆவர்.
விண்ணப்பித்தவர்களில் பொதுப்பிரிவினர் ஆயிரத்து 234 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 ஆயிரத்து 737 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாமியர் ஆயிரத்து 363 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஐந்தாயிரத்து 454 பேர், ஆதிதிராவிடர் நான்காயிரத்து 141 பேர், ஆதிதிராவிடர் அருந்ததியர் 612 பேர், பழங்குடியினர் 166 பேர் ஆவர்.
இவர்களில் 15 ஆயிரத்து 885 பேர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்துள்ளனர். ஏழாயிரத்து 366 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், பிற மாணவர்கள் மற்ற மாநிலப் பாடத்திட்டங்களிலும் படித்துள்ளனர். இவர்களில் நடப்பு ஆண்டில் பயின்றவர்கள் ஒன்பதாயிரத்து 596 பேர். கடந்த கல்வி ஆண்டுகளில் பயின்றவர்கள் 14 ஆயிரத்து 111 பேர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்தவர்கள் குறித்த விவரம்:
972 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில் 951 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களில் 266 மாணவர்களும், 685 மாணவிகளும் அடங்குவர்.
விண்ணப்பித்தவர்களில் பொதுப்பிரிவினர் மூன்று பேர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 332 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாமியர் 38 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 327 பேர், ஆதிதிராவிடர் 193 பேர், ஆதிதிராவிடர் அருந்ததியர் 54 பேர், பழங்குடியினர் நான்கு பேர் ஆவர்.
இவர்களில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பில் 227 மாணவர்களும், பிடிஎஸ் படிப்பில் 12 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் 86 மாணவர்களும், பி.டி.எஸ்.படிப்பில் 80 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள்:
14 ஆயிரத்து 511 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 14 ஆயிரத்து 276 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் மாணவர்கள் ஐந்தாயிரத்து 67 பேரும், மாணவிகள் ஒன்பதாயிரத்து 209 பேரும் அடங்குவர். அவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தில் ஐந்தாயிரத்து 770 பேரும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆறாயிரத்து 104 பேரும், ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் 461 பேரும், இதர பாடத் திட்டங்களில் ஆயிரத்து 941 பேரும் படித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் 15இல் எம்.பி.பி.எஸ் படிப்பில் இரண்டாயிரத்து 100 இடங்கள் உள்ளன. அவற்றில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 646 மாணவர்களும், 18 தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் 695 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு புதிதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பனிமலர் மருத்துவக் கல்லூரி, இந்திரா மருத்துவக் கல்லூரி ஆகியவை நடப்பு ஆண்டில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கவுள்ளன.