சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 78,693 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநகரத்தின் இணையதளத்தில் மாணவர்கள் கலந்துக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் https://tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், தேசிய மருத்துவக்கல்வி கழகத்தின் விதிமுறைகளின் படி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செப்.15 முதல் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
2023 - 2024 கல்வியாண்டில் இளநிலைப் மருத்துப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் பட்டப்படிப்பில் சேர்வதற்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தனியாகவும், அதேபோல், தனியார் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கும் விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜுன் 28-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி, ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மாணவர் சேர்க்கை தகவல் தொகுப்பு மற்றும் இதர விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பிற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கலந்தாய்வு 4 சுற்றுக்களாக நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் எம்பிபிஎஸ் படிப்பில் 5,175 இடங்கள் இருக்கின்றன. அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 3,050 இடங்கள் கிடைக்கும். பிடிஎஸ் படிப்பில் 2 அரசு பல்மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன. தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,960 இடங்ககள் கடந்தாண்டு இருந்தது.
2023 - 2024ம் கல்வியாண்டில் மேலும் 500 இடங்கள் பல்மருத்துவத்தில் வர உள்ளது. 3 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 450 இடங்களும், 50 இடங்கள் கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரியிலும் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Insurance Policy: அலுவலக ஊழியர்கள் டாப்-அப் பாலிசி எடுப்பது அவசியமா?