சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமத் தஹுர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஏற்பட்ட கவனக்குறைவால் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அவரின் வலது கை அகற்றப்பட்டது.
இது குறித்து விசாரணை நடைபெற உள்ளதாகவும், தவறு நிகழ்ந்து இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜீஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தைக்கு, தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீர் என்று வலது கைகறுப்பாக மாறியது உடனடியாக, அழுகவும் தொடங்கி உள்ளது. இதையடுத்து, குழந்தையின் கையை அகற்ற வேண்டுமெனத் தெரிவித்த மருத்துவர்கள், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, குழந்தையை அனுப்பிவைத்தனர்.
அங்கு 2 மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின்னர், குழந்தையின் வலது கை மூட்டுப் பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டது. இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, அலட்சியமாக செயல்பட்டதே கை பறிபோனதற்குக் காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டி இருந்தனர்.
குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் போது மூன்று நாட்களில் பணியில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்களிடம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (ஜூலை 4ஆம் தேதி) விசாரணை நடைபெறுகிறது. மேலும் குழந்தையின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்தநாளப்பிரிவுத்துறைத் தலைவர் ஸ்ரீதரன், பொது அறுவை சிகிச்சைத்துறைத் தலைவர் சாந்தி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோர் குழந்தையின் பெற்றோர்கள் கடந்த மூன்று நாட்களில் பணியில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை முடிவில் அளிக்கப்படும் அறிக்கை இன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
50 லட்சம் இழப்பீடு - ஈபிஎஸ் கோரிக்கை: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சரும் , அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி “ திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மஹீருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எதிர்காலத்தை இழந்த அந்த சிறுவனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: CM Stalin discharged: வீடு திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!