தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கடந்த ஒருவாரமாக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராடிவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் உள்ளது. நவீன அறிவியல் மருத்துவம் படிக்ககாதவர்கள் ஆறு மாத காலம் பயிற்சி எடுத்த நவீன மருத்துவர் போல் சிகிச்சையளிக்க உரிமம் வழங்க இம்மசோதா வழிவகை செய்கிறது.
இந்திய மருத்துவக் கழகத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் அறிவியல் சார்ந்த மருத்துவத்தை மட்டுமே கற்பித்தது. பிற்போக்கான மருத்துவத்தை ஊக்குவிக்கவில்லை. ஆகையால் இந்திய மருத்துவக் கழகத்தை கலைக்கக் கூடாது. மருத்து கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும். மேலும் போராடும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.