ஆயுஷ் மருத்துவம் படித்தவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அனைத்து மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் சிகிச்சையை தவிர்க்க உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் ராஜா, செயலாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா தொற்று தாக்கத்தின்போது அலோபதி மருத்துவர்கள் எந்த அளவு பணி புரிந்தனர் என்பதை உலகம் அறியும்.
ஆனால் கரோனா தொற்று நோயின் தாக்கம் மக்களிடம் இருந்து மறைவதற்கு முன்பாக மத்திய அரசு நவம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அலோபதி மருத்துவர்கள் செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதி ஆயோக் அமைப்பு மருத்துவக் கல்வி, பொது மக்களுக்கான சுகாதார முறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகிய எல்லாத் துறைகளையும் நவீன மருத்துவம், ஆயூஷ் மருத்துவமுறையை கலந்து 2030-ல் ஒரே கலவை முறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் ஆயூஷ் மருத்துவமுறையை பயின்ற மாணவர்கள் அலோபதி மருத்துவ முறையை பயின்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் மருத்துவத்துறை முழுவதும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த முறையால் அலோபதி மருத்துவர்கள் மட்டுமல்லாமல் ஆயுஷ் மருத்துவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவில் சுகாதார குறியீடுகளான தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தைகள் இறப்பு விகிதம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மிகவும் குறைக்கப்பட்டு வந்துள்ளது. மருத்துவத் துறையில் கலப்படம் செய்தால் மீண்டும் இந்தக் குறியீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அரசின் தற்போதைய குழப்பமான அறிவிப்பின் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். மேலும் நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் மக்களுடைய வேலை செய்யும் திறன் குறைந்து நாடு பொருளாதாரத்தில் பின் தங்குவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
எனவே இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்து அரசு திரும்ப பெறவேண்டும். மேலும் நிதி ஆயோக் அமைத்துள்ள மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்கும் விபரீதமான குழுக்களை கலைக்க வேண்டும்.
இந்திய மருத்துவச் சங்கமும் நாடு முழுவதும் பல்வேறு முயற்சிகளை இதற்காக மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 8-ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ இயக்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலும் டிசம்பர் 11-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள், (கரோனா அவசர சிகிச்சை தவிர்த்து) மற்ற அனைத்து சிகிச்சைகளையும் தவிர்க்க உள்ளோம் என அதில் கூறிபட்டிருந்தது.
இதையும் படிங்க: தேர்தலுக்கு முன் நில அபகரிப்பு தடை சட்டம்! - நீதிபதிகள் வலியுறுத்தல்!