சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுயில் மருந்தகம் நடத்திவருபவர் தண்டபாணி. இவர், வழக்கம் போல் கடையினை நேற்றிரவு மூடிவிட்டு இன்று காலை கடையை திறக்கவந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்பு, உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.
மருந்தகங்கள் குறிவைப்பு
இதேபோல், எதிரே சண்முக சுந்தரம் என்பவருக்குச் சொந்தமான பால்கடையின் பூட்டையும் அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதேபகுதியில் உள்ள மற்றொரு மருந்தகத்தின் பூட்டையும் உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
சேலையூர் காவல் எல்லைக்குள்பட்ட மருந்தகம், பீர்க்கன்காரணை காவல் எல்லைக்குள்பட்ட பால் கடை ஆகியவைகள் குறிவைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளது.
வணிகர்கள் கோரிக்கை
தொடர்ந்து மருந்தகங்கள், பால் நிலையங்களை குறிவைத்து நடந்தேறிய கொள்ளை சம்பவம் வணிகர்கள், இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக காவல்துறையினர் கொள்ளையர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காவல் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் - பட்டதாரி இளைஞர் கைது!