நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கு வீட்டில் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி இல்லாத 11 மாவட்டங்களில் தமிழ்நாடு பொறியியல் உதவி சேவை மையங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன், 'எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் பெறப்படுகிறது. காலை 11 மணிவரை 1,500 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, தனியார் மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தலாம் அல்லது வரைவோலையாகவும் (DD) எடுத்து அளிக்கலாம்.
மாணவர்கள் ஜூன் 20ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும். இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்கள் நகலை இணைத்து ஜூன் 21ஆம் தேதிக்குள் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவிற்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பிற்கு மாணவர்கள் வீட்டில் இருந்தும் விண்ணப்பிக்கலாம். வீட்டிலிருந்து விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மருத்துவக் கல்லூரி இல்லாத 11 மாவட்டங்களில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையங்களில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அரசு இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்' என அவர் தெரிவித்தார்.