சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி கடந்த மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்காமல் அலுவலர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. இதோடு மட்டுமில்லாமல், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மேம்பால பணியால் கனரக வாகனங்கள், லாரி, பேருந்து, கார் உள்ளிட்டவை பல கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய அவலநிலையும் உள்ளது.
இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இருந்த போதிலும், அலுவலர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்ட மதிமுக சார்பில் பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்த கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நெமிலிச்சேரி ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, மாவட்ட அவைத்தலைவர் பூவை.மு.பாபு தலைமை தாங்கினார். ஆவடி மாநகர செயலாளர் எஸ்.சூரியகுமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி கோஷமிட்டனர்.