நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் நீட் தேர்வு முடிவகள் வெளியானதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு 2019-20ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பற்றி அறிவிப்பு வெளியானது. நீட்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடைபெற்று அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதன்படி, தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. நீட் தேர்வு தகுதியின்படி அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதையடுத்து, ஜூலை 2ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 4ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால், மொத்தமாக 68 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பரீசிலனைக்கு ஒருவாரம் நீடித்தது. இதனால் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு தேதி தள்ளிப்போனது.
இந்நிலையில், ஒமந்தூரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இந்த தரவரிசை பட்டியலில் திருவள்ளூரைச் சேர்ந்த ஸ்ருதி விஜயகுமார் 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
மேலும், சிறப்பு பிரிவினருக்கான கலாந்தாய்வு வரும் ஜூலை 8ஆம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கலாந்தாய்வு 9ஆம் தேதியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.