இது குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறியிருப்பதாவது:
தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாய்வு தினமும் மூன்று பிரிவுகளாக நடைபெறும். வரும் 19ஆம் தேதி முதம் நடைபெறவிருக்கும் கலந்தாய்வுக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 2 ஆயிரத்து 7 வரை இடம்பெற்ற மாணவர்களும், 21ஆம் தேதி 3 ஆயிரத்து 18 வரை இடம் பெற்ற மாணவர்களும், 22ஆம் தேதி 4 ஆயிரத்து 13 வரை இடம் பெற்ற மாணவர்களும், 23ஆம் தேதி 4 ஆயிரத்து 971 வரை இடம்பெற்று மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.
இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை, ஜவர்கலால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதங்களை www.tnmedicalselection.org மற்றும் www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எந்த மாணவருக்கும் தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது.
மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு நாளில், ஒரு மணி நேரம் முன்னதாக தங்களின் சொந்த செலவில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வுக்கு வரும்போது தேவைப்படும் நிஜ சான்றிதழ்கள் கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை அளிக்க வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் சேராவிட்டால் இந்தக் கட்டணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட மாட்டாது. செல்போன் உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள் எதுவும் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் போக்குவரத்து கழக பணியாளர்களின் வாரிசுகளுக்கான இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (டிச. 16) நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக்கு 86 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் 48 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். 36 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
இந்தக் கலந்தாய்வில் 30 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 18 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.
அதேபோல், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக்கு 212 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 135 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். 27 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
இன்று நடைபெற்ற கலந்தாய்வில் 82 இடங்களில் மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். 53 மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்பை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர். இவ்வாறு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவம் மற்றும் தடய அறிவியல் துறையில் பணி!