சென்னை: தமிழ்நாட்டில் மளமளவென அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை, சுங்க கட்டண விலை ஆகியவற்றைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முழு ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை பாரிமுனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியது, 'சலுகை விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும்போது ஏன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும். தொடர்ந்து கலால் வரியை உயர்த்துவதற்கான காரணம் என்ன' எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு மட்டும் எப்படி சாத்தியமாகிறது. கடந்த 7 ஆண்டுகளில் எண்ணெய் மூலம் மட்டும் ரூபாய் 26.56 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கான அரசாக இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக ஒன்றிய அரசு செயல்படுகிறது' எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், 'சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வீடுகளில் அடுப்பு எரியாதவாறு ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கிறது. அதேபோல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி, வாகன ஓட்டிகளை சிரமப்பட வைத்துள்ளனர். இலங்கையைப் போல் இந்தியாவையும் திவால் ஆக்கும் நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நூதன முறையில் ஆர்ப்பாட்டம்