சென்னை: அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் போராட்டம் இன்று (செ.7) நடைபெற்றது.
இதில், தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் இன்று காலை 10.30 மணிக்கு கிண்டி ரயில் நிலையத்திலும், வடசென்னை மாவட்டக்குழு சார்பில், மூலக்கடை யூகோ வங்கி முன்பும், மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில், அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பும் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் பேரணியாக வந்து, கிண்டி ரயில் நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மத்திய அரசை கண்டித்து கடந்த 9 ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வைக் கண்டித்தும், வேலையில்லா தீண்டாத்தை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி, கோஷங்களை எழுப்பினர்.
தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கடற்கரை நோக்கி செல்லும் ரயில் கிண்டி ரயில் நிலையத்தில் நின்றது. இதனால் தாம்பரம்-கடற்கரை இடைய ரயில் போக்குவரத்து 15-நிமிடங்களுக்கு நிறுத்தபட்டது. போராட்டம் முடிந்த பின் மீண்டும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "மத்தியில் நடைபெறும் மோடி அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சுமார் 1 லட்சம் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவராமல், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமலும், இதை சமாளிக்க முடியாமல் வேறு விதமாக மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மோடி என்றால் ஊழல்; ஊழல் என்றால் மோடி என்று செயல்பட்டு வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியா என்ற பெயரை மாற்றுவது எனப் பல்வேறு வகையில் மக்களின் கவனத்தை திசைதிருப்பி கொண்டிருக்கிறார். மக்கள் இனி மோடியை நம்பமாட்டார்கள், இனி போராட்டங்களினால் மோடி அரசு வீழும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"சனாதனம் என்பது தொழுநோய், எச்.ஐ.வி போன்றது" - நீலகிரியில் ஆ.ராசா பேச்சு!