மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தே.இலட்சுமணன் (84) கரோனா பாதிப்பு காரணமாக நேற்று (ஆக. 24) இரவு உயிரிழந்தார். இவர் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும் இருந்துவந்தார்.
அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக இரங்கல் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த தோழர் தே.இலட்சுமணன் கால்நடைத் துறையில் சேர்ந்து அரசுப் பணியாற்றினார். கால்நடைத்துறை ஊழியர்களை அணிதிரட்டி படிப்படியாக தோழர் எம்.ஆர். அப்பனுடன் இணைந்து அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்குவதில் மாநிலம் முழுவதும் சென்று இரவு - பகலாக உழைத்தார். இவரது மறைவை தொடர்ந்து கட்சியின் மாவட்டக் குழுக்கள் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு நாளை நடத்துமாறு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது” என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...சென்னையைச் சேர்ந்த மாணவி லண்டனில் கடத்தல்; ஜாகீர் நாயக்கிற்கு தொடர்பா?