கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுவதை செய்திகள் மூலம் பார்த்து வருகிறோம். படித்த பெண்களாக இருந்தாலும் வரதட்சணை கொடுமைகளுக்கு உள்ளாகி ஒருபுறம் தற்கொலை முடிவுக்கு செல்வதும், மறுபுறம் மணமுடித்து வந்த இளம்பெண்களை தற்கொலைக்குத் தூண்டி உயிரைக் காவு வாங்கும் அவல நிலைகளும் அரங்கேறி வருகிறது.
தெரியாத சட்டம்
சட்டங்கள் பலமுறை திருத்தப்பட்டாலும் தீர்வு என்பது எட்டாத நிலையே வரதட்சணைக் கொடுமைகளில் தொடர்ந்து நிலவி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக சமீபத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடத்திய ஆய்வில் வரதட்சணை கொடுமை சட்டம் இருப்பது பல பெண்களுக்கு தெரியவில்லை என்கிறார் பெண் ஊழியர் சங்க மாநில செயலாளர் சுஜாதா.
கணவன் அத்துமீறல்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இரு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2018 ஆம் ஆண்டு பத்தணம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த உத்ராவை திருமணம் செய்ததோடு 112 சவரன் தங்க நகைகள், கார் என வரதட்சணையும் பெற்றார். அவ்வப்போது பணத்தை பெண் வீட்டாரிடம் இருந்து பெற்றும் திருப்தி அடையாமல் விஷப் பாம்பை கடிக்கச் செய்து மனைவியை கொன்று நாடகமாடினார். பின்னர் விசாரணையில் போலீசாரிடம் சிக்கி கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிக்கிய கணவர்
அதேபோல கொல்லம் மாவட்டத்தின் மற்றொரு பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா கணவன் வீட்டு குளியலறையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி பிணமாக தொங்கினார். 100 சவரன் தங்க நகைகள் உட்பட பெருமளவில் வரதட்சணை பெற்றும் விஸ்மயாவிற்கு அவரின் கணவன் மற்றும் குடும்பத்தார் அளித்த கொடுமை குறித்த விவரங்களும், அவரின் கணவர் கிரண் குமார் விஸ்மயாவை தாக்கிய புகைப்படங்களும், விஸ்மயா தனது உறவினர்களுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் மூலம் போலீசாருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அரசுப் பணியாளரான கிரண் குமார் கைது செய்யப்பட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் 66 பெண்கள் வரதட்சணை கொடுமைகளால் கொலை மற்றும் தற்கொலையில் உயிரிழந்துள்ளதாகவும், கேரள பெண்கள் மூலம் வரதட்சணைக் கொடுமை ஏற்பட்டதாக 15 ஆயிரத்து 143 வழக்குகள் பதிவாகியுள்ளது.
வரதட்சணை கொடுமை - மரணம்
இப்படி வரதட்சணைக் கொடுமையால் கேரளத்தில் இளம்பெண்கள் தற்கொலை அதிகரித்து வருவதாக நினைத்தால், தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கு அல்ல. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை வெளியிட்டுள்ள தரவுகளில் 190 பெண்கள் வரதட்சணை கொடுமைகளால் கொலை மற்றும் தற்கொலைகளால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
மறைக்கப்படும் உண்மை
மொத்தம் 963 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பல வரதட்சணைக் கொடுமை புகார்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டு விடுவதாகவும் கூறுகிறார் குற்றவியல் வழக்கறிஞர் கண்ணதாசன்.
2ம் இடத்தில் தமிழ்நாடு
நாட்டில் தற்கொலை அதிகம் செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழ்நாடு 2 ஆம் இடத்திலும், சென்னை முதல் இடத்திலும் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை எண்ணிக்கையில் ஒரு பங்கு வரதட்சணைக் கொடுமையால் நிகழ்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
இளம்பெண் உயிரிழப்பு
குறிப்பாக சென்னை பெரம்பூர் நீலம் காலணியை சேர்ந்த 21 வயதே நிரம்பிய ராமச்சந்திரன் மற்றும் கீர்த்தனா ஆகிய இரு இளம் சிட்டுக்கள் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந் நிலையில், இளம்பெண் கிருத்திகா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராமசந்திரனும் அவரது குடும்பத்தாரும் தனது தங்கையை வரதட்சணைக் கொடுமைக்கு உள்ளாக்கியதாக உயிரிழந்த இளம்பெண் கீர்த்தனாவின் சகோதரி போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
திருமணமாகி ஆறே மாதத்தில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அளிக்கப்பட்ட புகார் போலீஸ் விசாரணையில் இருந்தாலும், இச்செய்தி சென்னை வாசிகளுக்கு மீண்டும் ஒரு விஸ்மயாவையும், உத்ராவையும் நினைவூட்டிச் சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
தவறான புகார்கள்
வரதட்சணைக் கொடுமைகள் மட்டுமல்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடியோடு ஒழிக்க மிக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் வரதட்சணை புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக அக்கறையுள்ள பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க ;நண்பர்கள் தின ஸ்பெஷல்: எனக்கு நீ மட்டும்தான்டா இருக்க!