அண்மை காலமாக காவல் துறையினர் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிய மாவோயிஸ்ட் கும்பல் தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடி, சாம்ராஜ்நகர், கடம்பூர், பர்கூர் மலைப்பகுதியில் நடமாடுவதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, மலைகிராமங்களில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையம் முன் மணல் மூட்டைகளை வைத்து அடுக்கி அதில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இது தவிர, மாநில எல்லையில் உள்ளூர் காவலர்களுடன் நக்சல் பிரிவு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த மலைக்கிராமங்களில் புதிய நபர்கள் வருகையை காவல் துறையினருக்கும், வனத் துறையினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.