சென்னை: கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு அரசியலின் முக்கிய விஷயங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், திரைப்பட போஸ்டர்களில் ஆண் நாயகர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பெண் நாயகிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என கருத்து தெரிவித்தார்.
லியோ படத்தில் நடித்தது குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.
தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர், பாலியல் அவதூறு மற்றும் திட்டமிட்டு அவதூறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் மன்சூர் அலிகான் நவ.23ஆம் தேதி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரிய நிலையில், நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்திருப்பதால் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மன்சூர் அலிகான் தரப்பில், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும், அவதூறாக சமூக வளைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் கருதினால், முழு வீடியோ பதிவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்.
தனிப்பட்ட முறையில் நடிகை த்ரிஷா மீது எந்த பகையும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் என்ன கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம். சமூக வளைதளங்களால் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால், பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பதை மன்சூர் அலிகானுக்கு தெரிவிக்க வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: வெள்ளப் பாதிப்பால் சேதமடைந்த அரசு ஆவணங்கள், பள்ளி சான்றிதழ்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் ஏற்பாடு.. எந்தெந்த பகுதிகள்?