சென்னை: செங்குன்றம் முனியப்பன் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 61). இவர் மணிப்பூரை சேர்ந்த ஜோசப் கம் தேங் தாங்ஜூ (வயது 61) அவரது குடும்பத்தார் என மொத்தம் 9 பேரை தலைமை செயலகத்திற்கு அழைத்து வந்தார். அப்போது மணிப்பூர் குடும்பத்தினர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்தனர். அதில் மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு தமிழகத்திற்கு தப்பி வந்து உள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என ஜோசப் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
உடனே முதலமைச்சர் தனி பிரிவில் இருந்து மாவட்ட ஆட்சியர் அருணாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் அருணாவை உடனடியாக சென்று பார்க்குமாறும், அவர்கள் அனைத்து உதவிகளையும் செய்வார் என முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்து அனுப்பி உள்ளனர். இதை அடுத்து ஜோசப் குடும்பத்தினர் மூர்த்தியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்தித்த போது அவர்களுக்கு ஆட்சியர் ஆறுதல் கூறி மதிய உணவை வழங்கினார்.
மேலும் மணிப்பூர் கலவரத்தில் இருந்து தப்பி வந்த ஜோசப் குடும்பத்தினரிடம் ஆட்சியர் அருணா விசாரணை நடத்தினார். விசாரணையில், ஜோசப்பின் பூர்வீகம் தமிழ்நாடு என்பதும் இவர் 7 வயதிலேயே பெற்றோருடன் மணிப்பூர் சென்று விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் குக்கி இனத்தைப் போலவே கிறிஸ்தவத்தை பின்பற்றும் பழங்குடியினரான சுகுனு என்ற சமுதாயத்தில் திருமணம் செய்து கொண்டு அவரது பிள்ளைகளுக்கும் அதே சமுதாயத்தில் திருமணம் செய்து வைத்துள்ளதும் தெரிய வந்தது.
மேலும் மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக மிகப்பெரிய கலவரம் நடந்து வருவதால் இந்த கலவரத்திலிருந்து உயிர் தப்பி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்ததாக விசாரணையில் தெரிவித்து உள்ளார். பின்னர் எங்கே செல்வது என தெரியாமல் இரண்டு நாட்களாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலெயே தங்கியிருந்ததாக தெரிவித்து உள்ளார்.
மேலும் கடந்த 19ஆம் தேதி ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தபோது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த செங்குன்றத்தை சேர்ந்த மூர்த்தி கண்ணில் தென்பட்டு உள்ளனர். உடனே மூர்த்தி அவர்களிடம் விசாரித்த போது, தாங்கள் மணிப்பூரை சேர்ந்தவர்கள் கலவரத்தில் இருந்து தப்பித்து வந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து இரக்க குணம் கொண்ட மூர்த்தி அவர்களை செங்குன்றத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு உடை மற்றும் 3 ஆயிரம் ரூபாயும், வாடகைக்கு வீடு எடுத்தும் கொடுத்து உள்ளார். வேலைக்கு சென்ற உடன் பணத்தை திருப்பி கொடுத்தால் போதும் என மூர்த்தி தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து மணிப்பூர் குடும்பத்தினருக்கு உதவி கரம் நீட்டிய மூர்த்தியை ஆட்சியர் அருணா அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஜோசப் பின் குடும்பத்தினரின் கல்வித் தகுதி விவரங்களை கேட்டறிந்து கொண்ட ஆட்சியர் கல்விக்கு ஏற்ப வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார். மேலும் செங்குன்றம் பகுதி வருவாய் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஜோசப்பின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு ஆட்சியர் அருணா அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க ஜோசப் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது!