விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(38). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள், வெடிகுண்டு வீசியது உள்பட 28 வழக்குகள் உள்ளன. இதனால் அவர் தலைமறைவாக இருந்தார்.
அவரை பிடிப்பதற்காக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் தனிப்படையில் இடம்பெற்றிருந்த விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் துணை ஆய்வாளர் பிரபு, திருவெண்ணெய்நல்லூர் காவல் துணை ஆய்வாளர் பிரகாஷ் உள்பட 10 காவல் துறையினர் நேற்று இரவு 7 மணிக்கு அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பி செக்டார் 4ஆவது தெருவில் மணிகண்டன் பதுங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.
அப்போது அங்கு கீழ்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த மணிகண்டன் காவல் துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை காவல் துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், காவல் துணை ஆய்வாளர் பிரபுவை கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அதே கத்தியால் காவல் துணை ஆய்வாளர் பிரகாசையும் தாக்க முயன்றார்.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பிரகாஷ், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை நோக்கி 2 முறை சுட்டார். இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். பின்னர் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை தனிப்படையினர் சென்னை கொரட்டூர் காவல் துறையினருக்கு தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் கூடுதல் ஆணையர் தினகரன், துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் கண்ணன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மணிகண்டன் பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகை செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு தமிழ்நாடுஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,முழுக்க முழுக்க தற்காப்புக்காகத்தான் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மணிகண்டன் தாக்கியதில் துணை ஆய்வாளர் பிரபுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 16 தையல்கள் போடப்பட்டுள்ளன.