சென்னை: சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் அஜீத்குமார். தன் மனைவியின் பிறந்தநாள் பரிசாக ஆசையாக கேட்ட தங்க மோதிரத்தை வாங்க முடிவுசெய்துள்ளார். மோதிரம் வாங்க தன்னிடம் பணம் இல்லாத்தால், தன்னுடன் பணியாற்றிய வேல்விழி என்ற பெண்ணிடம் தனக்குப் பணம் தேவைப்படுவதாக கூறி பணமாகவோ? அல்ல அடமானம் வைக்க நகையாகவோ? தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு அப்பெண் மறுப்பது தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அஜீத்குமார், வேல்விழியை துப்பாட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், காதணி மற்றும் கால் கொலுசுகளை கொள்ளையடித்துள்ளார்.
பின்னர், இரவு 7 மணியளவில் வாடகைக்கு ஆட்டோ பிடித்து அதில், வேல்விழியின் உடலை வெள்ளை சாக்குப்பையில் அடைத்து, உடலை மறைக்கும் விதமாக அதனுடன் சில மின்சார ஒயர்களையும் சேர்த்து கோயம்பேடு தீயணைப்பு நிலையம் அருகே வீசிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் மகளை காணவில்லை என திருக்கோவிலூரில் இருந்து சென்ற வேல்விழியின் தந்தை ராஜேந்திரன், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக உயிரிழந்த வேல்விழி தங்கியிருந்த விடுதியில் உள்ள நண்பர்கள் காவல் துறை சாட்சிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், வேலைக்குச் சென்ற வேல்விழியின் துப்பட்டா, பை மற்றும் செருப்பு ஆகியவை விடுதியில் இருந்ததாகவும், செல்போன் மட்டும் காணாமல் போனதும், அஜித்குமார் சாக்கு பையுடன் ஆட்டோவில் சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து, காவல் துறை விசாரணைக்குப் பயந்த அஜித்குமார் விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்,
அங்கிருந்து கேரளாவிற்கு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அஜீத்குமாரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் நீண்ட நாள்களுக்குப் பின் சென்னை திரும்பிய அஜீத்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 450, 302, 379, 201ன் படி 4 பிரிவுகளில் வழக்கானது, சென்னை சென்ட்ரல் அருகே உள்ள அல்லிக்குளம் வணிக வளாகத்தில் செயல்படும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் 29 சாட்சிகள் சேர்க்கப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதி T.H.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அஜீத்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், வேல்விழியின் மரணம் அவரது பெற்றோருக்கு மிகப்பெரிய சோகத்தையும், இழப்பையும் ஏற்படுத்தயுள்ளது. அதை ஈடு செய்ய முடியாது. குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் 14 ஆயிரம் ரூபாயை வேல்விழியின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
இதையும் பருங்க: எருமை திருட்டு வழக்கில் 58 ஆண்டுகளுக்கு பிறகு கைதான நபர்.. நடந்தது என்ன?