சென்னை: துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 27 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில், துபாய்க்கு போய்விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார்.
அந்தப் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவர் உடைமைகளை சோதித்ததில், எதுவும் இல்லை. பின்பு அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்த போது, அவருடைய ஆடைகளுக்குள் தங்கப் பசை மற்றும் தங்கச் செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
தங்கப் பசை 934 கிராம், தங்க செயின்கள் 80 கிராம்,மொத்தம் ஒரு கிலோ 14 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 50 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் அனல் பறக்கும் க்ளிக்ஸ்