ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மீன்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பட்டாபிராம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டிலிருந்து சிலர் மீன்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.
காவல்துறையினர் அந்த வீட்டுக்குள் நுழைந்து அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு 15க்கும் மேற்பட்ட ஐஸ் பெட்டிகளில் மீன்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு டன் எடை உள்ள மீன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் மீன்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது மாரி (35) என்ற நபர் என்பது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மீன் வியாபாரி மாரியை கைது செய்தனர்.
தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான ஊழியர்ககளிடம் மீன்களை ஒப்படைத்தனர். அவர்கள் அதனை மாநகராட்சி குப்பை லாரியில் ஏற்றிச் சென்று சேர்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் குழிதோண்டி புதைத்தனர். மேலும், ஊரடங்கு நேரத்தில் மீன்களை விற்பனை செய்த மீன் வியாபாரி மாரிக்கு, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் ரூ.10,000 அபராதம் விதித்தது.
இதையும் படிங்க...ரகசிய இறைச்சி விற்பனையை ஊக்குவித்த மக்கள்!