சென்னை தி.நகர் பத்மநாபன் தெருவில் வசித்து வரும் சர்வன் குமார் ராஜி (35) என்பவருக்கும். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்தி (32) என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. 2016ஆம் ஆண்டு பிரசாந்தி குழந்தையை கணவர் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு தனது மேல்படிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டார்.
சமீபத்தில் சென்னை வந்த பிரசாந்திக்கு தனது கணவர் ராஜி வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்தி தன் கணவர் மீது தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக சர்வன் ராஜியை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில், ’தனது மனைவி வெளிநாட்டிற்கு சென்றபிறகு ராதா என்ற பெண்ணுடன் சர்வன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக வளர்ந்துள்ளது. அவ்விருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில் ராதாவிற்கு ஏற்கனவே சர்வன் ராஜிக்கு திருமணம் ஆனது தெரியவந்துள்ளது.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எப்படியாவது விவாகரத்து பெற்று ராதாவை திருமணம் செய்ய திட்டமிட்ட சர்வன் ராஜி வேறு ஒரு பெண்ணிற்கு பணம் கொடுத்து தன் மனைவி போல் நடிக்க வைத்துள்ளார். நீதிமன்றத்திலும் இவரையே தனது மனைவி போல் நடிக்க வைத்து விவாகரத்தும் பெற்றுள்ளார்.
பின்னர் தன் மனைவியுடன் விவகாரத்து பெற்றதாக விவகாரத்து சான்றிதழைக் காட்டி ராதாவை இரண்டாவது திருமணம் முடித்துள்ளார். ' என்பது தெரியவந்தது. இதனையடுத்து சர்வன் ராஜியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.