சென்னை: ஆவடி ஆதிபராசக்தி நகரில் இன்டேன் எரிவாயு முகமையகம் வைத்து நடத்தி வருபவர், ராதாகிருஷ்ணன் (46). இவர் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் கேஸ் சிலிண்டரை பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். இவரிடத்தில் கடந்த 7 ஆண்டுகளாக டெலிவரி பாயாக வேலை செய்து வந்தவர், மாங்காடு மேல் ரங்கநாதபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார்(33).
இவருக்கும் அதே கேஸ் கம்பெனியில் வேலை செய்து வந்த நாகேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராதாகிருஷ்ணன் முத்துக்குமாரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். முத்துக்குமார் தான் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை கொடுக்கும்படி ராதாகிருஷ்ணனிடம் கேட்டார். ராதாகிருஷ்ணன் கம்பெனியில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் கடந்த மாதம் 14ஆம் தேதி ராதாகிருஷ்ணன் எரிவாயு முகமையகம் அலுவலக ஷட்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தகவலின் பேரில் ஆவடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். இது குறித்து கேஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் கொடுத்தப் புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பூந்தமல்லியில் உள்ள மற்றொரு தனியார் கேஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்த முத்துக்குமாரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' வெளியாகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு!