சென்னை: கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் திருத்தப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள்களைத் தேசிய தேர்வு முகமை கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது.
அப்போது, 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆகக் குறைத்து மற்றொரு ஓஎம்ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
594 மதிப்பெண் என்ற புகைப்பட ஆதாரங்கள் மாணவன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக சிபிஐ அலுவலர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வு பிரிவை (Special investigation team) அமைத்து விசாரிக்கக் கோரப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சைபர் குற்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவிட்டது.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஓஎம்ஆர் விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி குறித்து மத்திய அரசே விசாரித்து வரும் நிலையில், சிபிசிஐடி விசாரணை தேவையற்றது. அதனால் தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதி அமர்வு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் பரேஷ் உபாத்யா, சக்தி குமார் அணி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
மாணவர் தொடர்ந்து படிக்கலாம்!
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கைத் தனி நீதிபதியே பிரதான மனு மீது மீண்டும் விசாரித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே, சிபிசிஐடி விசாரணைக்குத் தடைவிதித்து விட்ட நிலையில் தனி நீதிபதியின் விசாரணை முடியும் வரை, அந்தத் தடை தொடரும், மனுதாரர் மாணவன், தொடர்ந்து படிக்கலாம். தொடர்ந்து படிப்பது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் - மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை