தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 25 மாணவர்கள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். இ்ந்நிலையில், சுற்றுலாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்களை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய முன்னாள் கல்வித் துணை அமைச்சர் கமலநாதன்," ஜெயலலிதா இருந்தபொழுது அரசு பள்ளி மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என எடுத்த முடிவு தற்போது செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று கல்வி கற்பது என்பது ஒரு சிறந்த திட்டமாகும். இதன் மூலம் அந்த நாட்டில் உள்ள கல்வி கற்கும் முறை, தமிழர்களும், இந்தியர்களும் அங்கு எவ்வாறு வாழ்கின்றனர் என்பதையும், கலாசாரத்தையும் கற்றுக் கொள்கின்றனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இது சிறந்த திட்டமாக இருக்கும் என கருதுகிறேன். அரசுப் பள்ளிக்கு இந்த மாணவர்கள் தூதுவர்களாக இருப்பார்கள். 25 மாணவர்களும் தங்களிடம் இருக்கும் பல திறமைகளை தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு எடுத்துரைப்பார்கள். இதுபோன்ற திட்டத்திற்கு வருங்காலத்தில் உதவி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளது " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " ஒரு தமிழனாக பிறந்து தாய்மொழி கற்றுக் கொள்ளாவிட்டால் அது மிகப்பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். அதனால் வேலையை நம்பி மொழியை கற்றுக் கொள்ளக்கூடாது. அந்த மொழிதான் நமக்கு அடையாளமாக இருக்கிறது.
மலேசியாவில் தமிழ் தலைவர்களையும், சமூகத்திற்கு பாடுபட்டவர்களையும் மறக்கக்கூடாது என்பதற்காக அவர்களின் பெயரில் வகுப்பறைகள் அமைத்துள்ளோம். இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கு தேவையான உதவிகளை மலேசிய அரசு தொடர்ந்து செய்யும்" எனத் தெரிவித்தார்.