சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ''மக்களைத் தேடி மேயர் திட்டம்'' நிகழ்ச்சி நடைபெறுவுள்ளது என்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மண்டலம்-1க்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் கோரிக்கைகளை நேரிடையாக வழங்கலாம். மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 1913 அழைப்பு மையம் மூலமாக பொது மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அப்புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மனு பெறப்பட்டதற்கான ரசீதும் வழங்கப்படும். மனுவின் நிலை மற்றும் அது எந்த அதிகாரியின் நடவடிக்கைக்கு கீழ் உள்ளது என்பதை அறிந்துகொண்டு அலுவலரைத் தொடர்பு கொள்ளவும் முடியும்.
2023-2024 பட்ஜெட் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயரிடம், மாநகராட்சியில் இருக்கும் 15 மண்டலங்களிலும் பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாதத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக “மக்களைத் தேடி மேயர்” திட்டமானது வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மே-31ஆம் தேதி மண்டலம்-6லும், ஜூலை 5-ஆம் தேதி மண்டலம்-13லும், மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி திருவொற்றியூர் மண்டலத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி இன்று(ஆகஸ்ட்7) வெளியிட்ட அறிக்கையில் "மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மண்டலம்-1க்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-1க்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயர் அவர்களிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசின் அலட்சியம்..கால்பந்து பதக்கம் வென்ற பள்ளி மாணவியின் காலில் முறிவு