நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் வடக்கு, கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் ஏ.ஜி. மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி அக்கட்சியின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதால், மக்கள் நீதி மய்யதுக்கு டார்ச் லைட் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் சின்னம் ஒதுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அடங்கிய அமர்வில் இன்று (பிப். 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டார்ச் லைட் சின்னம் கிடைத்துவிட்டதால் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை ஏற்று, மனுவை திரும்பப்பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க... சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல - கமல்ஹாசன்