சென்னை: சென்னை ஐஐடியில் ஜே.இ.இ (Joint Entrance Examination) தேர்வினை எழுதி தகுதி பெற்றுச் சேர விரும்பும் மாணவர்களுக்காக முன்னாள் மாணவர்கள் நடத்தி வரும் ASKIITM.COM என்ற அமைப்பின் மூலம் நிறுவன வளாகத்தை நேரடியாக மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐஐடி குறித்துத் தேவைப்படும் சந்தேகங்களை ASKIITM.COM என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள் குழுவின் முதல்வர் மகேஷ் பஞ்சக்னுலா ஈடிவி பாரத் தமிழ்நாடு சேனலுக்கு (ETV Bharat Tamil) அளித்த சிறப்புப் பேட்டியில், "ஜே.இ.இ தேர்வு எழுதி சென்னை ஐஐடியில் சேர விருப்பம் மாணவர்கள், வரும் ஜூன் 24ஆம் தேதி நேரில் வந்து சென்னை ஐஐடியில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள் குறித்துக் கேட்டு அறியலாம்
இதன் மூலம், மாணவர்கள் இங்கு உள்ள ஒவ்வொரு ஆய்வகத்தையும், அதில் உள்ள வசதிகளையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், ஐஐடியின் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கி சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார்கள். மாணவர்கள் அதிக அளவில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்கின்றனர்.
இதையும் படிங்க: Kallanai Dam: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு.. மலர் தூவி திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு!
பிற பாட பிரிவுகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பும் நல்ல சம்பளமும் உள்ளது. பொறியியல் படிப்பினை பொறுத்தவரை, மற்றொரு துறை இணைந்து செயல்படும். கம்ப்யூட்டர் துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பது போலத் தோன்றினாலும், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட சென்னை ஐஐடியில் நடத்தப்படும் 15 பாடப்பிரிவுகளிலும் வேலை வாய்ப்புகள் நிரந்தர சம்பளத்துடன் கிடைக்கின்றன.
மாணவர்கள் டெட்ரோ கெமிக்கல் துறைக்கும், பெட்ரோலியம் துறைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றனர். அதனால் தான் மாணவர்கள் நேரடியாக வந்து பார்த்து, ஒவ்வொரு துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கண்டறிந்து, தாங்கள் விரும்பிய படிப்பினை தேர்வு செய்து படிக்க வேண்டும். சென்னை ஐஐடியில் உள்ள ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் (aeronautical science) பாடப் பிரிவினை தேர்வு செய்தவர்கள், தற்போது ஏர் டாக்ஸியை கண்டுபிடித்துள்ளனர்.
இதில் அனைத்து துறைகளைச் சார்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். எனவே மாணவர்கள் நேரில் பார்த்து தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்வதுடன், மகிழ்ச்சியாக வேலை செய்யும் வகையிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜே. இ. இ தேர்வினை எழுதாத மாணவர்கள் ஐஐடியில் படிக்கும் வகையில், பி.எஸ்.சி டேட்டா சயின்ஸ் (Bsc data science) மற்றும் பி.எஸ்.சி எலக்ட்ரானிக்ஸ் (Bsc electronics) போன்ற பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக அரசைக் கண்டித்து ஜூன் 21இல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு