சென்னை: மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் சிவானந்த், நேற்று (டிச.12) இரவு பாடி மேம்பாலம் கோயம்பேடு நோக்கி செல்லும் சாலையில் ஜீப்பில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளான நபர் காயங்களுடன் மயங்கி இருப்பதை பார்த்த ஆய்வாளர் சிவானந்த், உடனே ஜீப்பை நிறுத்தி காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் காயமடைந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க நினைத்த சிவனாந்த், அவரது பையை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது அதில் 1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளது. பின்னர் அவரது ஓட்டுநர் உரிமம் மற்றும் செல்போனில் கடைசியாக பேசிய நபருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேநேரம் காயமடைந்த நபர் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் காயமடைந்த நபர், சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்த ஹரிஹரன் (55) என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புழலில் இயங்கி வரும் கோல்டு நிறுவனத்தில் ஹரிஹரன் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.
மேலும் நேற்று ஹரிஹரன் புழல் பகுதியில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ கொண்ட தங்க நகைகளை, தியாகராய நகரில் உள்ள பிரபல நகை கடைக்கு கொண்டு செல்லும்போதுதான் விபத்து நேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிடைக்கப்பெற்ற நகைக்கு உண்டான ஆவணங்கள் சரியாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே ஹரிஹரன் பணியாற்றி வந்த நிறுவனத்தின் இயக்குனர் கதிரவனை நேரில் அழைத்த காவல் துறையினர், அவரிடம் தங்க நகைகளை ஒப்படைத்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்ததுடன், அவர் கொண்டு வந்த நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் சிவானந்துக்கு காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் நகை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வைத்தியம் பார்க்க வந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவர் கைது