மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வந்த 136 பேரை பணிநீக்கம் செய்தது குறித்து பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவினர் நேற்று ( ஏப்ரல்.26) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதன் செயலாளர் பேராசிரியர் முனைவர் முரளி பேசுகையில், "மதுரை காமராசர் பல்கலைக் கழக நிர்வாகம் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 136 தற்காலிகப் பணியாளர்களை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி 08-04-2022 அன்று பணி நீக்கம் செய்துள்ளது.
அவர்களுக்கு எழுத்து மூலமாக எந்தவித உத்தரவையும் கொடுக்காமல் வாய்மொழி மூலமே அவர்களை பணியிலிருந்து நீக்கியது. இதை எங்கள் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. எல்லா துறைகளிலும் போதுமான அளவு வேலைப்பளு இருந்தும் காலிப் பணியிடங்கள் உள்ளபோதும் பலகலைக் கழக நிர்வாகம் இவர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் பல இருக்கையில், புதிதாக வந்துள்ள துணைவேந்தர் வந்த அன்றே. இப்படிப் பட்ட உத்தரவை வெளியிட்டது நியாயமல்ல,
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வந்துள்ளனர். எல்லோருக்குமே மிகவும் குறைந்த ஊதியமே இதுவரை வழங்கப்பட்டு வந்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் நேர்காணல் தேர்வின் மூலம் முறையான தகுதியுடன் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். சிலர் வாய்மொழி மூலமான உத்தரவின் பேரில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். எல்லோருக்குமான ஊதியப் பட்டியலுக்குப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு இதுகாறும் ஒப்புதல் அளித்தே வந்துள்ளது. பல்கலையில் நிதிச் சுமையைக் காரணம் காட்டி இந்தப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
சிறப்பாக செயல்பட்டுவந்த பலகலைக்கழகம் கடந்த பத்து ஆண்டுகளில் படிப்படியாக நிதி நெருக்கடிக்கு ஆளானது ஏன் என்று நாங்கள் கேட்கின்றோம். முறையற்ற நிர்வாகத்தினால் இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்களின் மீது பல புகார்கள் இருந்தும் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தும், இது வரை அவர்கள் மீது பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை சொல்லமுடியுமா? யார் யாரோ செய்த தவறுகளுக்காக இன்று இவர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றனர். பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்களுக்குப் பணி வாய்ப்பு, பணித் தேவையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.
இதில் பலர் பட்டப்படிப்பும், பட்டயப்படிப்பும் முடித்த அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கக் கூட முடியாத அளவிற்கு வயது ஆகிவிட்டது. நிர்வாகத்தில் அறம் கொண்ட ஒரு சிறப்பு மாதிரியாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்பட்டுள்ளது. 136 பேரின் உழைப்பை பல ஆண்டுகளாக மிக மிக குறைந்த ஊதியத்திற்குச் சுரண்டி செயல்பட்டுள்ள நிர்வாகம் இன்று அரசு அழுத்தத்தின் பேரில் பணி நீக்கம் செய்ததாக அரசைக் கை காட்டுகின்றது.
தங்கள் வேலைத் தேவைக்காக இவர்களைத் தேவையான முறைகளை கடை பிடிக்காமல் பணியிலமர்த்தியிருந்தால் அது யார் குற்றம்? தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் படி இத்தனை ஆண்டுகளாக எந்த வித ஊதிய உயர்வும் இன்றி இவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் வேலை வாங்கியுள்ளது எந்த விதத்தில் சரி? இன்று 136 குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கவிடப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் இது குறித்து அக்கறை எடுத்து அவர்களை மீண்டும் பணியிலமர்த்த உதிரவிடக் கோருகின்றோம். ஆண்டொன்றுக்கு ஒன்றே கால் கோடி ரூபாய் இவர்கள் ஊதியத்திற்காக செலவிடப்பட்டு வருகின்றது. இந்தத் தொகை அரசுக்கு பெரிய தொகை அல்ல மேலும் நிதி நிலையை மேம்படுத்த புதிய துணைவேந்தர் தலைமையிலான நிர்வாகம் செயல்படும் என்றும் நம்புகின்றோம்.
தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையில் கருணையுடனும், தொழிலாளர் சட்ட நீதியைப் பாதுகாக்கும் வகையிலும் தலையிட்டு பணியிழந்துள்ள 136 பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோருகின்றோம். இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு தலையிட தவறுமே ஆனால் பொதுமக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் பேசுகையில், "மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு அஞ்சல் வழி கல்வி மையங்கள் மூலம் வரவேண்டிய பல்வேறு வகையான கட்டண பாக்கியை இது வரை வசூல் செய்யாததே இந்த நிதி சிக்கலுக்கு காரணம். ஏறக்குறைய 10 கோடிக்கும் மேல் இந்த தொகை உள்ளது. இதுதான் பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சிக்கு காரணம். பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி மையங்கள் மூலம் சிறப்பான கல்வியை அளித்திருந்தால் மாணவர்கள் பிற பல்கலைக்கழகங்களை நோக்கி சென்றிருக்க மாட்டார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக திறமையின்மை தான்" என்றார்.