சென்னை பல்கலைக்கழகத்தில் புத்திசம் (தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A) பிரிவில் படித்து வந்தவர் கிருபாகரன். இவரை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்குவதாக சென்னை பல்கலைக்கழகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கு, அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் இணைந்து அவர் செயல்பட்டது தான் காரணம் என்று அந்த மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் கிருபாகரன், ‘சென்ற ஜூலை 31ஆம் தேதி நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது என் சான்றிதழ்கள் அனைத்தும் முறையாக சரி பார்த்த பின்புதான் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். ஆனால், இப்போது சான்றிதழ்கள் சரியில்லை என்று கூறி என்னை கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளனர்.
இது தொடர்பாக நான் பயிலும் புத்திசம் துறையின் தலைவரிடம் விளக்கம் கேட்கும் போது அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதம் துணை வேந்தர், ஆளுநர் ஆகியோரின் தரப்பில் இருந்து உன்னை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என அழுத்தம் தரப்படுகிறது. நான் என் 20 ஆண்டு கால பணியில் இது போல் அழுத்தத்தைச் சந்தித்தது இல்லை. மேலும், அவர் தெரிவிக்கையில் நான் அம்பேத்கர் பெரியார் வாசகத்தில் இருந்து அவர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டதுதான் காரணம்” என தெரிவித்தார்.
அம்பேத்கர், பெரியார் கருத்துகளை பேசுவதில் என்ன தவறு உள்ளது. தொடர் அழுத்தத்தால் என்னை கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளனர். நான் தகுதி சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறி என்னை நீக்கியுள்ளனர்.
அதேபோல் அம்பேத்கர், பெரியார் அமைப்பில் உள்ளதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக உள்ளது. தற்போது இது தொடர்பாக உயர் கல்வித்துறைச் செயலாளரை சந்தித்து என் தரப்பை மனுவாக வழங்க உள்ளேன்’ என தெரிவித்தார்.