சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையைக் கண்காணிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த பாலமுருகன் என்பவர் தரப்பில், சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும், உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் வகையிலும் சிறப்பு அமர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
இதை அடுத்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு அமர்வை அமைப்பது தொடர்பாக பதிவுத்துறைக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, கூடிய விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என உறுதியளித்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் 11வது முறையாக நீட்டிப்பு!