சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு அமல்படுத்திய தடைச் சட்டத்தை எதிர்த்து மும்பையை சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின் முடிவில், இந்த வழக்கின் தீப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக, இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், ஆன்லைன் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் கவரப்பட்ட பல இளைஞர்கள் கடன் வாங்கி இந்த விளையாட்டை விளையாடி தோற்றுள்ளனர். அதனால், பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் சுமார் 30க்கும் அதிகமானோர் இதுவரை தற்கொலை செய்துள்ளனர்.
மாநில அரசு மக்களின் உரிமைகள் எப்போது பாதிக்கப்படுகிறதோ? அப்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம். இதற்கு மத்திய அரசின் அனுமதியை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து மாநில அரசு சட்டம் இயற்றயது எந்த விதத்திலும் சட்டவிரோதம் ஆகாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில், திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டு, சூதாட்டமாகாது. பந்தயம் வைத்து விளையாடப்படும் திறமைக்கான விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது. ஆன்லைன் விளையாட்டுக்களை பொறுத்தவரை, ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும் என சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள் ஒழுங்குமுறையாக பின்பற்றப்படுகின்றன.
மாநில அரசு ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. ஒரே செயலை ஆன்லைனில் மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும், நேரில் மேற்கொள்வது என்பது சட்டப்படியானது எனவும் வகைப்படுத்த முடியாது. வெறும் யூகங்களின் அடிப்படையில், மாநில அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
ஆன்லைனில் விளையாட ஒரு மேடையை அமைத்து தரும் நிறுவனங்கள், அதற்கு கட்டணம் வசூலிக்கிறது. அந்த கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வரியும் வசூலிக்கப்படுவதால், அதனால் சூதாட்டம் நடத்துவதாக கூற முடியாது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை.
மொத்த தொகையில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 16 சதவீதம் மட்டுமே கட்டணமாக பெறுகின்றன. ஆன்லைன் நிறுவனங்களின் தொழில் செய்யும் உரிமையை பாதிக்கச் செய்யும் வகையில் உள்ள இந்த சட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
தமிழக அரசு சட்டத்தில், வயது கட்டுப்பாடு, நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த முடியாது என அரசு கூற முடியாது. ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து, அதை மீறினால் தடை செய்யப்படும் என சட்டம் இயற்றலாம்.
பணத்திற்காகத்தான் ஆன்லைன் விளையாட்டு நடத்திப்படுகிறது. யாரையும் கட்டாயத்தின் பேரில் விளையாட வைப்பதில்லை. அதனால் தான் உச்சநீதிமன்றம், திறமைக்கான விளையாட்டு என உத்தரவிட்டது. திறமையாக விளையாடும் அனைவரும் வெற்றி பெற முடியும். திறமைக்கான விளையாட்டாக இருக்கும் ஆன்லைன் விளையாட்டை, சூதாட்டம் என வகைப்படுத்தி தடை விதிக்க முடியாது. வல்லரசு நாடுகளில் கூட ஆன்லைன் விளையாட்டுக்களை திறமைக்கான விளையாட்டாக நீதிமன்றங்கள் பார்க்கிறது என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, திறமைக்கான விளையாட்டுகளான ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுக்கு விதிமுறைகள் கொண்டு வரும் அதிகாரம் மட்டுமே உள்ளது என தீர்ப்பளித்துள்ளனர்.
இவ்வாறு, ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் தடைச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அனுராக் சக்சேனா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தனது வரவேற்பினைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கரை திறமைக்கான விளையாட்டுகள் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, முறையான ஆன்லைன் திறன் கேமிங் துறைக்கான மற்றொரு சரிபார்ப்பு. இந்திய நீதித்துறையானது, ஆன்லைன் விளையாட்டுகளுக்கான தடைச்சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால், தடையை மீண்டும் நீக்கியுள்ளது.
இந்த வளர்ந்து வரும் துறையின் வளர்ச்சியை மேலும் ஆதரிக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகள் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டக்கூடிய துறையின் திறனை உணர்ந்துள்ளன. மேலும், இந்த தீர்ப்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும். இத்துறைக்கான முற்போக்கான கொள்கை கட்டமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை ஆராய மாநில அரசுகளை வலியுறுத்தும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க முடிவு!