சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
அதில், "திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டு, சூதாட்டமாகாது. பந்தயம் வைத்து விளையாடப்படும் திறமைக்கான விளையாட்டு, சூதாட்டமாகக் கருத முடியாது. ஆன்லைன் விளையாட்டுக்களைப் பொறுத்தவரை, ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும் என சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள் ஒழுங்குமுறையாகப் பின்பற்றப்படுகின்றன.
மாநில அரசு ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. ஒரே செயலை ஆன்லைனில் மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும், நேரில் மேற்கொள்வது என்பது சட்டப்படியானது எனவும் வகைப்படுத்த முடியாது. வெறும் யூகங்களின் அடிப்படையில், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விளையாட ஒரு மேடையை அமைத்துத் தரும் நிறுவனங்கள், அதற்குக் கட்டணம் வசூலிக்கிறது. அந்த கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வரியும் வசூலிக்கப்படுவதால், சூதாட்டம் நடத்துவதாக கூற முடியாது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை.
மொத்த தொகையில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 16 சதவீதம் மட்டுமே கட்டணமாகப் பெறுகின்றன. ஆன்லைன் நிறுவனங்களின் தொழில் செய்யும் உரிமையை பாதிக்கச் செய்யும் வகையில் உள்ள இந்த சட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
தமிழக அரசு சட்டத்தில், வயது கட்டுப்பாடு, நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த முடியாது என அரசு கூற முடியாது. ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து, அதை மீறினால் தடை செய்யப்படும் என சட்டம் இயற்றலாம்" என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (செப்.05) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பணத்திற்காகத்தான் ஆன்லைன் விளையாட்டு நடத்திப்படுகிறது. யாரையும் கட்டாயத்தின் பேரில் விளையாட வைப்பதில்லை. அதனால் தான் உச்சநீதிமன்றம், திறமைக்கான விளையாட்டு என உத்தரவிட்டது. திறமையாக விளையாடும் அனைவருக்கும் வெற்றி பெற முடியும்.
திறமைக்கான விளையட்டாக இருக்கும் ஆன்லைன் விளையாட்டை, சூதாட்டம் என வகைப்படுத்தி தடை விதிக்க முடியாது. வல்லரசு நாடுகளில் கூட ஆன்லைன் விளையாட்டுக்களை திறமைக்கான விளையாட்டாக நீதிமன்றங்கள் பார்க்கிறது என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக வாதத்தை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து உத்தர்விட்டனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் போலீஸ் தற்கொலை முயற்சி.. வரதட்சணை கொடுமை என பெண் போலீஸ் புகார்..