சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியைப் பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் உள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தைத் தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜகவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களும், டிவிட்டர் பதிவுகளும் நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, பாஜகவின் இளைஞரணி தலைவராகவும், ட்விட்டரில் மனுதாரரை பின் தொடர்பவர்கள் 68 ஆயிரம் பேர் உள்ள நிலையில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளதாகவும், மேலும், அரசியலுக்காக மதத்தை ஒரு கருவியாக மனுதாரர் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, பத்திரிகையில் வந்த செய்தியையே பகிர்ந்ததாக வினோஜ் பி. செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராயவும், வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தலின்போது பேரவைக்கும் தேர்தல் - ஓபிஎஸ் ஆருடம்