சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடிகளைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைகாலத் தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது.
அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சி பெயர், சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அவற்றை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால உத்தரவு விதித்தது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதித்த நீதிபதி வழக்கை நவம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கட்சியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்க முடியாது” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நவ 8ஆம் தேதி ஓபிஎஸ் சார்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து மனுத் தாக்கல் நடைமுறைக்கு பின், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்த நிலையில், மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்தும் வழக்கு
விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று (நவ.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு நாளை (நவ.16) விசாரிக்கப்படும் என அறிவித்து வழக்கை தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: மதுரவாயல் அருகே அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!