சென்னை: கபடி விளையாட்டினால் காயம் ஏற்படுகிறது என்ற காரணத்திற்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கபடி விளையாட்டு போட்டிக்கு அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஜாகிர் தண்டலம் கண்டிகை கிராமத்தில் உள்ள 'வெற்றியின் சிகரம் கபடி குழு'வின் சார்பில் எம்.ஜீவா என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், 'கடந்த ஜனவரி மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி கோரி, நெமிலி காவல் ஆய்வாளரிடம் 25ஆம் தேதி மனு விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு அனுமதி வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக இன்று (பிப்.4) விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், கடந்த ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாததால் சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும், கரோனா பரவல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதி அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பொதுமக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் கரோனா பரவல் குறித்து அரசின் அறிவிப்பு ஏதும் தற்போது இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று தேதியில் கபடி: மேலும், காயம் ஏற்படுகிறது போன்ற காரணங்களுக்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது என்றும் கூறி, கபடி போட்டிகளை நடத்த அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்து நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மாற்று தேதியில் போட்டிகளை நடத்த அனுமதி கோரி புதிய மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த மனு மீது உரிய உத்தரவுகளை பிறப்பிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: சென்னையின் முதல் நகரசபை கூட்டம்.. மாநகராட்சிக்கு முக்கிய கோரிக்கை!