சென்னை: மத்திய அரசு, கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வந்த பின், கடந்த 2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. உயர் தரமான கேபிள் டிவி சிக்னல்களை பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் இணைக்கப்பட்டது.
பின்னர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் வழங்கும் சேவை பொதுமக்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் நலனுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நலன்புரி நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 17.4.2017 அன்று தமிழ்நாட்டில் நேரடியாக இணைப்பு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுவதற்காக இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு மேலாண்மை சேவை அமைப்பை தற்காலிக பதிவாக வழங்கியது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் திறந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் மேம்படுத்தப்பட்ட MPEG 4 கட்டுப்பாட்டு அறையை அறிவித்தார். மேலும், சந்தாதாரர்களுக்கு செட் டாப் பாக்ஸை (STB) விநியோகித்து, 1.9.2017 அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டுக்கு முன் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, அதை வசூலிக்கும் நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன், உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை எதிர்த்தும், வசூல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பிலும், சில உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் எந்த நோட்டீசும் அளிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், தொலைத்தொடர்பு தகராறு தீர்ப்பாயத்தில் தான் இந்த பிரச்னையை எழுப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் இருந்து பாக்கி தொகையை வசூலிக்க தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:Jailer Update: ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்.. மிரள வைக்கும்ஜெயிலர் அப்டேட் வெளியீடு!