சென்னை: சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் யூடியூபர் டிடிஃஎப்.வாசன் மீது கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து டிடிஃஎப் வாசன் ஜாமீன் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி டிடிஃஎப் வாசனின் பைக்கை ஏன் எரிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியும், யூடியூப் பக்கத்தை முடக்கவும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுநர் உரிமம் போக்குவரத்து துறையால் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வாசனால் இனி வாகனம் ஓட்ட முடியாது என்றும் கூறினார்.
மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து நீதிபதி, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:விஜிலென்ஸ் அதிகாரி எனக் கூறி காதல்! கல்லூரி மாணவியை ஏமாற்றி மூன்றாவது திருமணம்! 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திய நபர் கைது!