சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, திரைப் பிரபலங்கள் பலர் மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, திரைப்பட நடிகை த்ரிஷா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.
இவ்வாறான தேசிய மகளிர் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில், தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர், பாலியல் அவதூறு மற்றும் திட்டமிட்டு அவதூறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான், கடந்த நவம்பர் 23ஆம் தேதி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கோரிய நிலையில், நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் அவரின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக நடிகை த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் கருத்து தெரிவித்திருப்பதால், அவர்கள் மீது மன்சூர் அலிகான் குற்றம் சாட்டினார்.
பின்னர், மூவரிடம் இருந்து தலா 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், “இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் என்ன கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம்.
சமூக வலைத்தளங்களால் இளைஞர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால், பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பதை மன்சூர் அலிகானுக்கு தெரிவிக்க வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். மேலும் த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பெண் நடிகர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருப்பதற்கு எதிராக மற்ற நடிகர்கள் பேசியது இயல்பானது. அதனால் மானநஷ்ட வழக்கு தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்து, அவதூறாக கருத்து தெரிவித்த மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: தமிழக மழை வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்