சென்னை: ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழக்கியுள்ளது.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுநர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
![விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15582927_nr.jpg)
இந்த வழக்கில் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றார்.
![நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15582927_n.jpg)
மேலும், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர்நீதிமன்றம் அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம் எனவும், இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் தெரிவிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் இந்த விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க கூடாது.
![விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15582927_ndd.jpg)
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிட தான் கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய 2018இல் அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. ஆளுநரின் அதிகாரம் என்ன என உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே விடுதலை குறித்து பரிசீலிக்கலாம் எனவும் வாதிட்டார்.
![சென்னை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15582927_nd.jpg)
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போல் விடுதலை செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தை தான் நளினி நாட வேண்டும் எனவும் குறிப்பிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு இன்று (ஜூன்.17) தீர்ப்பு அளித்தது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அதிகாரம் போல உயர் நீதிமன்றம் விடுதலை உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.