சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா திருவிடந்தை என்னும் கிராமத்தில், 160 ஏக்கர் பரப்பில் உலகத் தரம் வாய்ந்த துணைநகரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அரிஹந்த் ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனம் அந்த பகுதியில் உள்ள கோவில் நிலம், திருவாழி குட்டை, அம்பாள் ஏரிக்களுக்கிடையே 60 அடி அகலத்தில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என, அந்த கிராமத்தை சேர்ந்த ராஜா, சுந்தர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "கோவில் நிலம், நீர்நிலைகளை தங்களுக்கு சொந்தம் எனக் கூறி தனியார் நிறுவனம் சாலை அமைக்க அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். நீர் நிலைகளை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றக் கூடாது என்பதை கவனித்தில் கொள்ளாமல் அலுவலர்கள் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
ஏரி, கோவில் நிலத்தில் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன். தமிழ் செல்வி ஆ அமர்வு, ஏரிகள் மீது சாலை அமைக்க தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பிரபல ஹோட்டல்ஸ் நிறுவன சொத்துகள் மாற்றும் நடவடிக்கைக்கு தடை